Press & Media

‘குறுகிய அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’

‘குறுகிய அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’

நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, குறுகிய அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டிய நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதுலை முன்னணியோ தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை எனவும், முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

அப்போதிருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது, நாடு ஓரளவு பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், ஆபத்து முற்றாக மறைந்துவிடவில்லை என சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், தவறான தீர்மானம் ஒன்றினால் நாடு மீண்டும் 2022இல் இருந்ததைவிட மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தருணம் சோதனைகளை நடத்துவதற்கான வாய்ப்பல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,

“இது, ஜனாதிபதி விக்கிரமசிங்கவினாலோ அல்லது வேறு தலைவரொருவராலோ தனியாகத் தீர்த்துவைக்கக்கூடிய பிரச்சினையல்ல. இந்நாடு பொருளாதார ரீதியில் பிரச்சினைகளைச் சந்தித்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாட்டை அப்பிரச்சினைகளிலிருந்து மீட்ட கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியே விளங்குகிறது.

“இந்நாடு பயணிக்க வேண்டிய சரியான பாதையை, ஒவ்வொரு முறையும் எமது கட்சி காட்டியுள்ளது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும், நாம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறோம். 2015இல் அரசாங்கமொன்றை அமைத்த உடனேயே, அரச வருமானத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம்.

“அரசின் அத்தியாவசியச் செலவுகள், அபிவிருத்திப் பணிகள், நிவாரண மற்றும் கடன் மீளச் செலுத்துகைக்காக, அரச வருமானம் பலமாக இருக்க வேண்டும். அரச வருமானம் பலவீனமடைந்த உடனேயே, நாட்டின் பொருளாதாரம் உடன் வீழ்ச்சியடையும். அது கட்டாயம் நடக்கும். அந்த நிலைமைதான் 2020இல் ஆரம்பமாகி 2022 ஆகும்போது, மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக வளர்ச்சி கண்டது.

“தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச வருவாயை அதிகரித்து, அதற்கு முன்னுரிமை அளித்து, கடந்த பருவத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை தேவையான சீர்திருத்தங்களுடன் மீண்டும் கட்டியெழுப்புகின்றார். இந்த முறை மாற்றம் பற்றிப் பேசுபவர்கள் சீர்திருத்தங்கள் மீது கடும் அச்சம் அல்லது பயம் காட்டுகிறார்கள் என்பது இதன் முகமாகப் புலப்படுகிறது. மேலும் அதை அரசியல் கோஷங்களாக மாற்றும் மலிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சீர்த்திருத்தங்கள் இல்லாமல் சிஸ்டத்தை எப்படி மாற்றுவது என்பதுதான் இங்கே தெளிவாகக் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

“நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் இது ஜனாதிபதியால் மட்டும் செய்யக்கூடிய ஒன்றல்ல. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், உலகப் போக்குகளுக்கு ஏற்றவாறு பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்த முயற்சித்தது. அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்கான தடைகள் மிகப் பெரிதாக இருந்தன. பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன. தனிப்பட்ட முறையிலும் எங்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. அவர்கள் நமது அரசியல் விவகாரங்களை மிக மோசமாகப் பாதிப்படைச் செய்தனர். ஆனால் நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றவில்லை.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் போது அழகான விடயமொன்றை முன்வைத்தார். அது மிகவும் தீர்க்கமான அறிக்கை. அதாவது ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ இந்நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தை தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இப்போது, ஐமசவினுள் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிய ஒரு குழுவினரே உள்ளனர். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில், சரியோ அல்லது பிழையோ, அவர்கள் ஓர் அரசியல் முடிவை எடுத்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள், ஐதேக மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர்களாவர். கருத்தியல் ரீதியாக அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் சித்தாந்தத்திற்குள்ளேயே இருக்கின்றார்கள். இந்த இக்கட்டான தருணத்தில், இந்நாட்டின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அவர்களுக்கு என்னதான் தடையாக இருக்கப்போகின்றது? அந்தத் தடையை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டால், அந்தத் தடையை முறியடிக்கும் தைரியம் இருந்தால், நாட்டைக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவித்து, அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பணியில் அவர்கள் அங்கம் வகிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

“மேலும், மக்கள் விடுதலை முன்னணியும் இந்தத் திட்டத்துடன் இணைந்து செயற்பட எந்தத் தடையும் இல்லை. பல விஷயங்களில் தேசிய மக்கள் சக்தி பற்றிய நமது கருத்துக்களுடன் அவர்கள் இணக்கமாக உள்ளனர். ​​இந்தியாவின் அழைப்பின் பேரில், ஜே.வி.பி தலைவர்கள் தலைமையிலான குழுவொன்று, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. ஜே.வி.பி.யின் கடந்தகால அரசியல் நடைமுறை முற்றிலும் இந்தியாவுக்கு எதிரானது. அவர்கள் இந்திய விரிவாக்கம் என்ற தனி வகுப்பைக்கூட பிரித்திருந்தனர். அந்த வகுப்பை அவர்கள் பின்னர் நீக்கிக்கொண்டாலும், இந்திய எதிர்ப்பு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. கடந்த காலத்தில் எட்கா ஒப்பந்தம் முதல், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்குவது வரையும், இலங்கைக்குக் கிடைக்கவிருந்த இந்திய முதலீடுகளுக்கு, ஜேவிபியினர் எந்தளவுக்கு எதிர்ப்புகளை வெளியிட்டனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது இந்தியாவுக்குச் சென்று இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது என்பார்களா? இந்திய முதலீடுகளுக்கு நாட்டை திறப்பது குற்றமா? அதானியை இலங்கைக்கு வர விடமாட்டேன் என்பார்களா? இந்தியாவுடன் வியாபாரம் செய்தால் சீனா குழப்பமடையும் என்பதால் இந்திய உறவுகளை நிராகரிப்பார்களா?

“தற்போது, மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் அமுல் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மாபெரும் எதிர்ப்புகளை வெளியிட்டாலும், இப்போது பாருங்கள், அமுல் நிறுவனத்தின் கண்காணிப்புப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்றுதான், நாளைய தினமே IMF உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால், நாங்கள் நிபந்தனைகளுக்கு வேலைசெய்வோம் என்று கூறுவார்களா, இல்லை அனைத்தையும் சுருட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்வார்களா? கடன் கொடுத்தவர்களிடம் பேசும்போது, நிலைமை தெரியாமல்தான் கடன் கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்புவார்களா, இல்லை மேலும் கடன் கொடுத்தால் கொடுங்கள், கடனை முடிந்தபோது செலுத்துவோம் என்று கூறுவார்களா?

“எமது பிரதான எதிர்த் தரப்பான ராஜபக்ஷ முகாமைச் சேர்ந்த பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, அரசாங்கத்தை நல்லபடியாகத் தற்போது கொண்டு நடத்தவில்லையா? அந்த வேலைத்திட்டம், பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை ரீதியான வேலைத்திட்டமல்ல. ஆனாலும், இதுதான் இப்போது சரியான கொள்கைத்திட்டம். சரியானதைச் செய்ய, எவரும் பின்வாங்கத் தேவையில்லை. இன்னமும் பழைய அரசியல் கொள்கைகளைக் கடைபிடிப்பதென்பது, வரலாற்றுச் சாபத்துக்கு உள்ளாகும் நிலைமையாகும் என்பதை, அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

“அதேபோன்று, இந்நாட்டு மக்கள், இன்னொரு விடயத்தைக் கருத்தில் எடுக்க வேண்டும். அதாவது, 2022இல் காணப்பட்ட நிலைமையுடன் ஒப்பிடுமிடத்து, இந்நாடு தற்போது. பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், நாட்டைச் சூழ்ந்திருந்த ஆபத்து, முற்றாக ஒழியவில்லை. இன்னும் நாங்கள், உரிமலையில் உச்சியில்தான் இருக்கிறோம். நாமிருக்கும் எரிமலை வெடித்துச் சிதறுவதற்கு, ஒரேயொரு தவறான தீர்மானம் போதும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், 2022இல் காணப்பட்ட நிலைமையை விட மோசமான பொருளாதாரப் பாதிப்பை இந்நாடு எதிர்கொள்ளும்.

“அதனால், இந்தத் தருணமென்பது, பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தருணமல்ல. தேர்தல்கள் நெருங்கியுள்ளதால், அழகழகான கதைகளைக் கூறமுடியும். வித்தியாசமான பிரச்சாரங்களைக் கொண்டுவர முடியும். ஆனால், கொள்கைகள் தொடர்பில் கவனியுங்கள். அதனால்தான், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மாற்று வேலைத்திட்டங்கள் இருந்தால் முன்வையுங்கள் என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். IMF உடன் கூட பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இது எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை. அதோடு விளையாட வேண்டாம். பொறுப்புணர்வுடன் தீர்மானங்களை எடுங்கள். வார்த்தை ஜாலங்களுக்கு ஏமாற வேண்டாம். வார்த்தை ஜாலங்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடொன்று இவ்வுலகில் இல்லை. சரியான கொள்கைகளுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை விடுத்து, வார்த்தைகளை நம்பினால், இரவு விழுந்த குழியில்தான் பகலிலும் விழவேண்டி ஏற்படும்” என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.

Search