Press & Media

'மத்திய வங்கி அதிகாரிகள் செய்யும் வேலை அசிங்கமானது'

'மத்திய வங்கி அதிகாரிகள் செய்யும் வேலை அசிங்கமானது'

ஒவ்வொருவரும் தமது செலவுகளை மட்டுப்படுத்தி நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள

போதிலும், அது குறித்து கணக்கிலெடுக்காத இலங்கை மத்திய வங்கி, தங்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் வீழ்ச்சி தொடர்பில் அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்த முன்னாள் அமைச்சர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகளின் தலையீடு அதிகளவில் இருக்க வேண்டும் எனவும், அவ்வாறான நிலை தற்போது தென்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியதாவது,

“22 மாதங்களுக்கு முந்தைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளது. ஆனால் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. சரிந்த நாட்டை மீண்டும் தலைநிமிர்த்த ஒருவர் முன் வந்தார். அவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் அவர் வெற்றி பெற்றார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது, ​​நாட்டின் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. பயத்தில் ஒளிந்துகொண்டார்கள். மறைந்திருந்தவர்கள் இன்று வந்து வேடிக்கையான கதைகளைச் சொல்கிறார்கள். அந்த வேடிக்கையான கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடிப்பதும் குற்றம். இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால் நாட்டின் நிலைமையையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேலையில் குறுக்கு வழிகள் எதுவும் இல்லை” என்றார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மை முன்னிறுத்துவார் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஊடகங்களும் அவற்றை வித்தியாசமாக வெளியிடுகின்றன. ஆனால், மக்கள் கஷ்டப்படாத வகையில் நாட்டை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை அனைவரும் செய்ய வேண்டும். ஜோக்கர்கள் வெவ்வேறு கதைகளைக் கூறினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்ய அனைவரும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” என்றார்.

Tamilleader

 

Search